இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய், கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான். சவுல் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கி வருகையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது.
அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே. எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.
சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை.
தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். கர்த்தர் தரிசனத்தில் அவனைக் கூப்பிட்டு, “அனனியா!” என்றார்.
அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ அடியேன்!” என்றான்.
அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார்.
அப்பொழுது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.
ஆனால் அதற்குக் கர்த்தர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிந்தெடுத்திருக்கிறேன்.