அப்போஸ்தலர் 8:1-25

அப்போஸ்தலர் 8:1-25 TCV

ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள். இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள். ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள். இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. சீமோன் என்னும் பெயருடைய ஒருவன், சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து, சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கச்செய்தான். அவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காண்பித்துக்கொண்டான். இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள். சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். ஆனால் பிலிப்பு இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தியையும் இயேசுகிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக திருமுழுக்குப் பெற்றார்கள். சீமோனும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றான். அவன் தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான். சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள். இவர்கள் அங்கேபோய்ச் சேர்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள். ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பேதுருவும் யோவானும் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, “நான் எவர்கள்மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான். அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்! இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே. எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார். ஏனெனில், நீ முழுவதும் கசப்பிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றான். அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான். பேதுருவும் யோவானும் சாட்சி கூறி, கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.