அப்போஸ்தலர் 6:1-7

அப்போஸ்தலர் 6:1-7 TCV

அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களில் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், எபிரெய மொழி பேசும் யூதருக்கு எதிராக முறையீடு செய்தார்கள். ஏனெனில், தங்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பகிரும்போது, அலட்சியம் பண்ணப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் எல்லா சீடர்களையும் ஒன்றாய்க் கூட்டி, “நாம் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், சாப்பாட்டுப் பந்தியில் பணிசெய்வது சரியானது அல்ல. எனவே பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் இருந்து ஏழுபேரைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களென நற்சான்று பெற்றவர்களாய் இருக்கவேண்டும். நாங்கள் இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்போம். நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் செலுத்துவோம்” என்றார்கள். அவர்கள் சொன்னது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிந்துகொண்டார்கள்; அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத விசுவாசத்தைப் பின்பற்றுபவனாயிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள். இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக ஆசாரியர்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்