அப்போஸ்தலர் 17:1-15

அப்போஸ்தலர் 17:1-15 TCV

அவர்கள் அம்பிப்போலி, அப்பொலோனியா ஆகிய பட்டணங்கள் வழியாக வந்து, தெசலோனிக்கேயாவுக்கு வந்தார்கள். அங்கே ஒரு யூத ஜெப ஆலயம் இருந்தது. பவுல் தனது வழக்கத்தின்படியே, அந்த யூத ஜெப ஆலயத்திற்குள் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவசனத்திலிருந்து அங்கிருந்தவர்களுடன் விவாதித்தான். கிறிஸ்து வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும், இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்றும் விளக்கமாய் கூறி அதை நிரூபித்தான். நான் உங்களுக்கு அறிவிக்கிற, இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் கூறினான். சில யூதர் இதை ஏற்றுக்கொண்டு, பவுலுடனும், சீலாவுடனும் சேர்ந்துகொண்டார்கள். அப்படியே, இறைவனுக்குப் பயந்த பெரும் எண்ணிக்கையான கிரேக்கரும், மதிப்புக்குரிய பல பெண்களும், அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் யூதரோ பொறாமை கொண்டார்கள்; சந்தைகூடும் இடங்களில் நிற்கும் சில பொல்லாத மனிதர்களின் உதவியுடன், ஒரு கலகக் குழுவை உருவாக்கிப் பட்டணத்தில் குழப்பம் விளைவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் பட்டணத்தாருக்குமுன் கொண்டுவருவதற்காக, அவர்களைத் தேடி யாசோனுடைய வீட்டிற்கு விரைந்து ஓடினார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அவர்கள் யாசோனையும், வேறுசில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாக இழுத்து வந்தார்கள். அவர்கள், “உலகம் முழுவதிலும் கலகத்தை உண்டாக்குகிற இந்த மனிதர் இங்கேயும் வந்துவிட்டார்கள். யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வரவேற்றிருக்கிறான். அவர்கள் இயேசு என்னும் வேறொரு அரசன் இருப்பதாகக் கூறி, ரோமப் பேரரசனின் சட்ட ஒழுங்குகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது, மிகவும் குழப்பமடைந்தார்கள். பின்பு அவர்கள் யாசோனையும் மற்றவர்களையும் ஜாமீனில் போகவிட்டார்கள். அன்று இரவே சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். பெரோயா பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் தெசலோனிக்கேயாவைச் சேர்ந்தவர்களைவிட சிறந்த குணமுடையவர்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, பவுல் சொன்னது உண்மைதானோ எனக் கண்டறிவதற்கு ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். பல யூதர்கள் விசுவாசித்தார்கள், கனம்பொருந்திய அநேக கிரேக்கப் பெண்களும் ஆண்களும் விசுவாசித்தார்கள். பெரோயாவில் பவுல் இறைவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கிறான் என்று தெசலோனிக்கேயாவிலுள்ள யூதர் அறிந்தபோது, அவர்கள் அங்கேயும் போய் மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிட்டார்கள். உடனே சகோதரர் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள். பவுலைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் அத்தேனே பட்டணம் வரைக்கும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது, சீலாவும் தீமோத்தேயுவும் விரைவில் தன்னிடம் வந்து சேர்ந்துகொள்ள வேண்டும் என்று பவுல் இவர்களுக்குக் கொடுத்த செய்தியைக் கொண்டுசென்றார்கள்.