அப்போஸ்தலர் 16:25-34

அப்போஸ்தலர் 16:25-34 TCV

கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான். அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான்; அவன் தானும், தன்னுடைய குடும்பத்தார் அனைவரும், இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 16:25-34