அப்போஸ்தலர் 16:1-15

அப்போஸ்தலர் 16:1-15 TCV

பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின. பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார். அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள். அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான். பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம். துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள்.