செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன். அவனும், அவன் குடும்பத்தினர் அனைவரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கிறவனாகவும், ஒழுங்காக இறைவனிடம் மன்றாடுகிறவனாகவும் இருந்தான். ஒரு நாள் பிற்பகல் மூன்றுமணியளவில், அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் அதிலே இறைத்தூதன் ஒருவனை மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.
கொர்நேலியு அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான்.
இறைத்தூதன் பதிலாக, “உனது மன்றாட்டுகளும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும், இறைவனுக்கு முன்பாக ஒரு நினைப்பூட்டும் காணிக்கையாக வந்திருக்கின்றன. ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல். அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கிறது” என்றான்.
தன்னோடு பேசிய இறைவனுடைய தூதன் போனபின்பு, கொர்நேலியு தனது வேலையாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு படை வீரனையும் அழைத்தான். அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.
அவர்கள் பயணம் செய்து மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேதுரு வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடும்படி போனான். அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாராகிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான். அப்பொழுது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பூமியை நோக்கி இறங்கி வருவதையும் அவன் கண்டான். அதற்குள் எல்லா விதமான நான்கு கால்களையுடைய மிருகங்களும், பூமியிலுள்ள ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன. அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.
அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் சாப்பிட்டதில்லை” என்றான்.
இரண்டாம் முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.
இவ்விதம் மூன்று முறைகள் நடந்தன. பின்பு உடனே அந்த விரிப்புத் துணி மீண்டும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்டவர்கள், சீமோனுடைய வீட்டைத் தேடிவந்து, அதன் கதவருகில் நின்றார்கள். அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கேட்டார்கள்.
பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோனே, இதோ மூவர் உன்னைத் தேடுகிறார்கள். எனவே நீ எழுந்து கீழே இறங்கிப்போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
எனவே பேதுரு இறங்கிப்போய் அவர்களிடம், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தலைவனான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கிற ஒருவர். அவர் எல்லா யூத மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு இறைவனுடைய பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான்.