2 பேதுரு 2:5-11

2 பேதுரு 2:5-11 TCV

முற்காலத்தில் இருந்த உலகத்தையும் இறைவன் தப்பிப்போக விடவில்லை. அதில் வாழ்ந்த இறை பக்தியற்ற மக்களின்மேல் வெள்ளத்தை வரச்செய்தார். ஆனால் நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அவர் காப்பாற்றினார்; இறைவன் சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறை பக்தியற்றவர்களுக்கு, இதுவே நிகழும் என்று காண்பிப்பதற்காக, அந்தப் பட்டணங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இப்படிச் செய்தார். ஆனால் இறைவன் நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். அவனோ, அநியாயக்காரர்களின் அசுத்த வாழ்க்கையினாலே மனம் புண்பட்டவனாய் இருந்தான். அந்த நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது, நாளுக்குநாள் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே, தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான். அது அப்படியானால், இறை பக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றும், அநியாயக்காரர்களை எப்படி நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் தண்டனைக்கு உட்படுத்தும்படி வைத்துக்கொள்ளுவது என்றும், கர்த்தர் அறிந்திருக்கிறார். விசேஷமாக பாவ இயல்பிலிருந்து எழும் தங்களுடைய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து, அதிகாரத்தை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இந்த தண்டனை உண்டாகும். இப்படிப்பட்டவர்கள் துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள். இவர்கள் பரலோகத்தில் உள்ளவர்களை அவதூறாய் பேசவும் பயப்படுவதில்லை. ஆனால், இவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களும், அதிக வல்லமையுடையவர்களுமான இறைவனுடைய தூதர்கள்கூட பரலோகத்தில் உள்ளவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதில்லை.