2 இராஜாக்கள் 18:1-12

2 இராஜாக்கள் 18:1-12 TCV

ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது. எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான். யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான். அவன் பெலிஸ்தியருடன் போரிட்டு, காவற்கோபுரம் தொடங்கி அரணான பட்டணம்வரை காசாவின் எல்லைவரை அவர்களைத் துரத்தினான். எசேக்கியா அரசனாக வந்த நான்காம் வருடம், ஏலாவின் மகனான இஸ்ரயேல் அரசன் ஓசெயாவின் ஏழாம் வருடமாயிருந்தது. அந்த வருடத்தில் அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டான். மூன்று வருடங்களுக்குப் பின்பு அசீரியர் சமாரியாவைக் கைப்பற்றினார்கள். அந்த வருடம் எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியும், இஸ்ரயேலின் அரசனாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியுமாயிருந்தது. அப்போது அசீரிய அரசன், இஸ்ரயேலரை அங்கிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தி, அவர்களைக் ஆலாகிலும், ஆபோர் ஆற்றுக்கு அருகே இருக்கும் கோசானிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய உடன்படிக்கையை மீறியதால்தான் இவை நடந்தன. யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, அவற்றின்படி நடக்கவுமில்லை.