2 கொரிந்தியர் 3:1-6

2 கொரிந்தியர் 3:1-6 TCV

நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா? இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு. நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது. அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார்.