1 தீமோத்தேயு 3:1-8

1 தீமோத்தேயு 3:1-8 TCV

யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்? அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும். அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம். அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது.