1 தீமோத்தேயு 2:6-15

1 தீமோத்தேயு 2:6-15 TCV

இயேசு எல்லா மனிதர்களையும் மீட்கும் பொருளாகத் தன்னையே ஒப்படைத்தார். இதுவே ஏற்றகாலத்தில் கொடுக்கப்பட்ட சாட்சியம். இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன். எனவே எல்லா இடங்களிலும் உள்ள ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாயும், வாக்குவாதம் செய்யாதவர்களாயும், பரிசுத்த கைகளை உயர்த்தி மன்றாட வேண்டும் என்று, நான் விரும்புகிறேன். அவ்வாறு, பெண்கள் அடக்கமாய் உடை உடுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒழுக்கமான, தகுதியுடைய உடைகளையே உடுத்தவேண்டும். தலைமுடி அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலை உயர்ந்த உடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்கேற்றபடி நல்ல செயல்களினால் தங்களை அலங்கரிக்கவேண்டும். ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும். ஏனெனில் முதலாவது ஆதாமே உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே, ஏவாள் உருவாக்கப்பட்டாள். ஏமாற்றப்பட்டவன் ஆதாம் அல்ல; பெண்ணே ஏமாற்றப்பட்டு, பாவத்திற்கு இடம் கொடுத்தாள். ஆனால் பெண்கள் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், பிள்ளைப்பெறுவதினாலே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.