1 சாமுயேல் 20:35-42

1 சாமுயேல் 20:35-42 TCV

மறுநாள் காலையில் யோனத்தான் தாவீதைச் சந்திப்பதற்காக வயலுக்குப் போனான். அவனுடன் ஒரு சிறுவன் இருந்தான். யோனத்தான் அந்த சிறுவனிடம், “நான் எய்யும் அம்புகளை நீ ஓடிப்போய்த் தேடி எடுத்து வா” என்று சொன்னான். அச்சிறுவன் ஓடும்போது அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். யோனத்தான் எய்த அம்பு விழுந்த இடத்திற்குச் சிறுவன் ஓடியபோது யோனத்தான் சத்தமிட்டு அவனைக் கூப்பிட்டு, “அம்பு உனக்கு அப்பால் இருக்கிறதல்லவா” என்றான். பின்பும் யோனத்தான் சத்தமிட்டு, “விரைந்து ஓடிப்போ; வேகமாய்ப் போ; நில்லாதே” என்றான். யோனத்தானுடன் வந்த சிறுவன் அம்புகளைப் பொறுக்கிக்கொண்டு அவனிடம் வந்தான். சிறுவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே இது தெரிந்திருந்தது. அதன்பின் யோனத்தான் தன் ஆயுதங்களையெல்லாம் சிறுவனிடம் கொடுத்து அவனிடம், “இவற்றையெல்லாம் திரும்பவும் பட்டணத்துக்குக் கொண்டுபோ” என்று சொல்லி அனுப்பினான். சிறுவன் போனவுடனே தாவீது தான் மறைந்திருந்த கல்லின் தெற்குப் பக்கத்திலிருந்து வெளியே வந்து, முகங்குப்புற விழுந்து மூன்றுமுறை யோனத்தானை வணங்கினான். அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டு அழுதார்கள். தாவீதே அதிகமாக அழுதான். அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “சமாதானத்தோடே போ, யெகோவாவின் பெயரில் நாம் இருவரும் ஒருவரோடொருவர் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டோம். யெகோவா உனக்கும் எனக்கும் இடையிலும், என் சந்ததிக்கும் உன் சந்ததிக்கும் இடையிலும் என்றென்றைக்கும் சாட்சியாக இருக்கிறார் என்றும் சொன்னோம்” என்றான். பின்பு தாவீது அவ்விடம்விட்டுப் போனான். யோனத்தான் பட்டணத்துக்குத் திரும்பிப்போனான்.