1 பேதுரு 3:8-16

1 பேதுரு 3:8-16 TCV

இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள். தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும். அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும். ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.” நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்? ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.” ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும். நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள்.