1 பேதுரு 3:1-7

1 பேதுரு 3:1-7 TCV

மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும். தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும். உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல. அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது. ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள். அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள். கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.