1 பேதுரு 1:6-13

1 பேதுரு 1:6-13 TCV

இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும். தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும். நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள். தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள். அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள். ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.

1 பேதுரு 1:6-13 க்கான வீடியோ