இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு,
இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது: நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை; நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும். தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும். நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.