1 இராஜாக்கள் 19:5-21

1 இராஜாக்கள் 19:5-21 TCV

அதன்பின் அவன் அந்தச் சூரைச்செடியின்கீழ் படுத்து உறங்கினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றான். எலியா சுற்றிப் பார்த்தபோது நெருப்புத் தணலின்மேல் சுடப்பட்ட அப்பத்தையும், ஒரு ஜாடி தண்ணீரையும் அவன் தலைமாட்டில் கண்டான். அவன் சாப்பிட்டு, குடித்துத் திரும்பவும் படுத்துவிட்டான். அப்போது யெகோவாவின் தூதன் இரண்டாம் தரமும் வந்து அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு. ஏனென்றால் நீ போகவேண்டிய பயணம் மிகவும் தூரமானது” என்றான். அப்படியே அவன் எழுந்து சாப்பிட்டு, குடித்தான். அந்த உணவினால் பெலனடைந்தவனாய், இறைவனுடைய மலையான ஓரேப் மலையை அடையும் வரை இரவும் பகலும் நாற்பது நாட்கள் பயணம் பண்ணினான். அங்கே ஒரு குகைக்குள் போய் அந்த இரவைக் கழித்தான். அப்போது யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்து, “எலியாவே இங்கே என்ன செய்கிறாய்?” என்றார். அதற்கு அவன், “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடம் மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவனாய் இருந்தேன். இஸ்ரயேல் மக்களோ உம்முடைய உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களை உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளால் வெட்டிக் கொன்றுபோட்டார்கள். நான் மட்டும்தான் மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்ல முயற்சிக்கிறார்கள்” என்று சொன்னான். அதற்கு அவர், “இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார். ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்” என்றார். அப்பொழுது பெரிதும் பலமான ஒரு காற்று யெகோவாவின் முன்பாக மலைகளைப் பெயர்த்து, பாறைகளை உடைத்துச் சிதறடித்தது. ஆனால் யெகோவா அந்தக் காற்றில் இருக்கவில்லை. காற்றின் பின் ஒரு பூமி அதிர்ச்சி உண்டானது. ஆனால் யெகோவா அந்த பூமி அதிர்ச்சியிலும் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சியின் பின்பு நெருப்பு உண்டானது. ஆனால் யெகோவா அந்த நெருப்பிலும் இருக்கவில்லை. நெருப்பு வந்தபின் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. எலியா அதைக் கேட்டபோது, தன் மேலுடையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே போய் குகை வாசலில் நின்றான். அப்பொழுது அவனிடம், “எலியாவே இங்கு என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அவன் அதற்கு மறுமொழியாக, “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாக இருந்தேன். இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களையும் உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளினால் கொன்றுபோட்டார்கள். நான் மட்டுமே மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள்” என்று சொன்னான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நீ வந்த வழியாய்த் திரும்பி தமஸ்குவின் பாலைவனத்திற்குப் போ. நீ அங்கு போய்ச்சேர்ந்ததும் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம்பண்ணு. அதோடுகூட இஸ்ரயேல் அரசனாக நிம்சியின் மகன் யெகூவையும் அபிஷேகம்பண்ணு. ஆபேல் மெகொலா ஊரைச்சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை உனக்குப்பின் வரப்போகும் இறைவாக்கினனாகவும் அபிஷேகம்பண்ணு. ஆசகேலின் வாளுக்குத் தப்பி ஓடுபவனை யெகூ கொல்வான். யெகூவின் வாளுக்குத் தப்பியவனை, எலிசா கொன்றுபோடுவான். இருந்தாலும் பாகாலுக்கு முன் முழங்கால்களை முடக்காத, தங்கள் வாய்களினால் அவனை முத்தமிடாத ஏழாயிரம்பேரை இன்னும் இஸ்ரயேலில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றார். அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது எலிசா எருதுகளை விட்டுவிட்டு எலியாவின் பின்னாலே ஓடிப்போய், “என் தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்று வர அனுமதிக்கவேண்டும். அதன்பின் உம்முடன் வருகிறேன்” என்றான். அதற்கு எலியா, “நீ திரும்பிப்போ. நான் உனக்கு என்ன செய்தேன் என்பதைக் கவனத்தில்கொள்” என்றான். எனவே எலிசா அவனைவிட்டுத் திரும்பிப்போனான். அவன் தனது ஏர் மாடுகளைப் பிடித்து, அவைகளைக் கொன்று, கலப்பையை எரித்து அந்த இறைச்சியைச் சமைத்து அதை மற்றவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின் எலியாவைப் பின்தொடர்ந்து போய் அவனுக்கு உதவிகளைச் செய்தான்.