1 இராஜாக்கள் 11:26-40

1 இராஜாக்கள் 11:26-40 TCV

அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் அரசனுக்கெதிராய் கலகம் செய்த விதமாவது: சாலொமோன் அரண்மனைத் தளங்களைக் கட்டி, தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்தின் மதிலில் இருந்த இடைவெளிகளையும் நிரப்பினான். இத்தருணத்தில் யெரொபெயாம் ஒரு மதிப்புள்ள மனிதனாக காணப்பட்டான். அந்த வாலிபன் தன் வேலைகளை எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பதை சாலொமோன் கவனித்தபோது, யோசேப்பு வீட்டாரின் எல்லா தொழிலாளர்களுக்கும் பொறுப்பாக அவனை வைத்தான். அந்நாட்களில் ஒரு நாள் யெரொபெயாம் எருசலேம் பட்டணத்துக்கு வெளியே போய்க்கொண்டிருந்தபோது, சீலோவைச் சேர்ந்த இறைவாக்கினனான அகியா ஒரு புதிய மேலுடையை உடுத்திக்கொண்டு வழியில் அவனைச் சந்தித்தான். இருவரும் பட்டணத்துக்கு வெளியே தனியாக நின்றனர். அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, யெரொபெயாமைப் பார்த்து, “இவற்றில் பத்து துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: ‘சாலொமோனின் கையிலிருந்து ஆட்சியை பறித்து, அதில் பத்து கோத்திரங்களை உனக்குத் தரப்போகிறேன். எனது அடியவனாகிய தாவீதின் நிமித்தமாகவும், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமின் நிமித்தமாகவும், ஒரு கோத்திரம் அவனுக்காக இருக்கும். நான் இதைச் செய்வேன். ஏனென்றால் அவன் என்னைக் கைவிட்டு சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், மோவாபியரின் தெய்வமான கேமோசையும், அம்மோனியரின் தெய்வமான மில்கோமையும் வணங்கினான். அவன் என்னுடைய வழிகளில் நடக்கவுமில்லை; என் பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்யவுமில்லை. சாலொமோனின் தகப்பனான தாவீது செய்ததுபோல என் விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவுமில்லை. “ ‘ஆனாலும் சாலொமோனின் கையிலிருந்து முழு ஆட்சியையும் எடுக்கமாட்டேன். நான் தெரிந்துகொண்டவனும், என் கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டவனுமான என் அடியவன் தாவீதின் நிமித்தம், சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அவனை அரசனாக வைத்திருக்கிறேன். தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன். என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய். அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன். இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான். அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 இராஜாக்கள் 11:26-40