1 கொரிந்தியர் 6:1-7

1 கொரிந்தியர் 6:1-7 TCV

உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. ஆதலால், அத்தகைய காரியங்களைக்குறித்து உங்களுக்குத் தகராறு ஏற்படுமாயின், திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டவர்களையே நியாயத்தீர்ப்பு செய்யும் நடுவர்களாக நியமித்துக்கொள்ளுங்கள். உங்களை வெட்கப்படுத்துவதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களிடையே உள்ள தகராறைத் தீர்க்கக்கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையோ? மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகிறானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாகவே இப்படிச் செய்கிறானே. உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது?