ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார். முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது. உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம். அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார், ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும். உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள். ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா? எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே.