1 கொரிந்தியர் 1:21-29

1 கொரிந்தியர் 1:21-29 TCV

உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார். யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது. ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார். ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது. பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை. ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார். இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.