ரோமர் 7:14-25

ரோமர் 7:14-25 IRVTAM

மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன். எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே. எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை. எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன். உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன். ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

ரோமர் 7:14-25 க்கான வீடியோ