ரோமர் 15:1-13

ரோமர் 15:1-13 IRVTAM

அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக. எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்; “யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது. மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார். மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார். மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான். பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

ரோமர் 15:1-13 க்கான வீடியோ