நீதி 6:24-35

நீதி 6:24-35 IRVTAM

அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா? பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான். திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது. பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான். அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.