பிலி 3:4-14

பிலி 3:4-14 IRVTAM

சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம். நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். அதுமட்டும் இல்லை, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாக இல்லாமல், கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசம் மூலமாக தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாக இருந்து, கிறிஸ்துவிற்குள் இருக்கிறவன் என்று தெரியும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றும் குப்பையென்றும் நினைக்கிறேன். நான் பெற்றுக்கொண்டேன் அல்லது முழுவதும் தேறினவனானேன் என்று நினைக்காமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்வதற்காக ஆசையாகத் தொடருகிறேன். சகோதரர்களே, அதைப் பிடித்துக்கொண்டேன் என்று நான் நினைக்கிறதில்லை; ஒன்று செய்கிறேன், கடந்தவைகளை மறந்து, வருகிறவைகளைத் தேடி, கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.