பிலே 1:8-19

பிலே 1:8-19 IRVTAM

ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால், நீர் செய்யவேண்டியதை உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறிஸ்துவிற்குள் நான் துணிவுள்ளவனாக இருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினாலே மன்றாடுகிறேன். என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான். அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும். நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் இல்லை, மனப்பூர்வமாகச் செய்வதற்காக, நான் உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்வதற்கு எனக்கு மனமில்லை. அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்! ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்