எண் 20:1-12

எண் 20:1-12 IRVTAM

இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்திரத்திலே சேர்ந்து, மக்கள் காதேசிலே தங்கியிருக்கும்போது, மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்பட்டாள். மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள். மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: “எங்களுடைய சகோதரர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும். நாங்களும் எங்களுடைய மிருகங்களும் இங்கே இறக்கும்படி, நீங்கள் யெகோவாவின் சபையை இந்த வனாந்திரத்திலே கொண்டு வந்தது என்ன; விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன்” என்றார்கள். அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; யெகோவாவுடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, சபையாருக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய்” என்றார். அப்பொழுது மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியே யெகோவாவுடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படச்செய்வோமோ” என்று சொல்லி, தன்னுடைய கையை ஓங்கி, கன்மலையைத் தன்னுடைய கோலினால் இரண்டுமுறை அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாகப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. பின்பு யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்செய்யும்படி, நீங்கள் என்னை விசுவாசிக்காமல் போனதால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்