இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான். சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது, ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.