இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள். அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது. சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
“அவர்கள் குணமாகாதபடிக்கும்,
பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும்,
அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,
கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி,
இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.