அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது. கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து. அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான். பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து, சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள். அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.