பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான். தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான். தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய
கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
அது கர்த்தராலே நடந்தது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள். அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள். அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து: போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது. ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள். எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.