மாற் 11:12-25

மாற் 11:12-25 IRVTAM

அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்: என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள். மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள். அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள். பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான். இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.

தொடர்புடைய காணொளிகள்