மத் 9:1-17

மத் 9:1-17 IRVTAM

அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான். மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள். இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.