மத் 6:1-24

மத் 6:1-24 IRVTAM

“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார். அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே. மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார். நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார். பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும். கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும்! இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத் 6:1-24