மத் 27:27-56

மத் 27:27-56 IRVTAM

அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.

மத் 27:27-56 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்