மத் 27:1-26

மத் 27:1-26 IRVTAM

விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது. அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.