மத் 19:1-15

மத் 19:1-15 IRVTAM

இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார். அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.