மத் 17:14-20

மத் 17:14-20 IRVTAM

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான். அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.