மத் 13:31-58

மத் 13:31-58 IRVTAM

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார். இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான். மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது. அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார். இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார். அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.