லூக் 7:31-50

லூக் 7:31-50 IRVTAM

மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்? சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார். பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி, பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக் 7:31-50