லூக் 4:33-44

லூக் 4:33-44 IRVTAM

ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்தஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது. பின்பு அவர் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டிற்குப் போனார். அங்கு சீமோனுடைய மாமியார் கடும் ஜூரத்தோடு படுத்திருந்தாள். அவளை குணமாக்கவேண்டுமென்று அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் அவளிடம் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது, அவள் எழுந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார். பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார். சூரியன் உதயமானபோது அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார். அநேக மக்கள் அவரைத் தேடி அவரிடம் வந்து, அவர்களைவிட்டுப் போகவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்தப்பார்த்தனர். அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார். அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.