லூக் 16:1-18

லூக் 16:1-18 IRVTAM

பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான். அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன். நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான். அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்? வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார். இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு ஒழிந்துபோவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.