லூக் 13:1-21

லூக் 13:1-21 IRVTAM

அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார். அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள். அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.