உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும், தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள். திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்? எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால், அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான். தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.