லூக் 12:13-33

லூக் 12:13-33 IRVTAM

அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார். உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக் 12:13-33