லூக் 11:5-10

லூக் 11:5-10 IRVTAM

பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.