லூக் 11:1-13

லூக் 11:1-13 IRVTAM

அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்; எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.