லூக் 10:1-28

லூக் 10:1-28 IRVTAM

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம். ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள். பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும். வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார். பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.