யோசு 7:3-10

யோசு 7:3-10 IRVTAM

யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது. அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். யோசுவா: ஆ, யெகோவாவாகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தான் நதியைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும். ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். கானானியர்களும் தேசத்தின் குடிகள் அனைவரும் இதைக்கேட்டு, எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களுடைய பெயரை பூமியில் இல்லாதபடிக்கு வேரில்லாமற்போகச் செய்வார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்திற்கு என்ன செய்வீர் என்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?

யோசு 7:3-10 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்